நவராத்திரியில் அம்பாள் வழிபாடு பரவலாக உள்ளது. ஸ்ரீவித்யா உபாசகர்கள் ஆழ்ந்து வழிபடுவார்கள். பிரம்மாண்ட புராணத்தில், லலிலிதா உபாக்யானத்திலுள்ள லலிலிதா சகஸ்ரநாமத்தின் அறுபதாவது துதி, "கராங்குனி நக உத்பன்ன நாராயண தசாக்ருதி' என்கிறது. அதாவது, மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் தேவியின் கைவிரல் நகங்களிலிருந்து உதித்தன என்று கூறுகிறது.
ஸ்ரீவித்யாவில் யக்ஞ வித்யா, மஹா வித்யா, உபாஸனா வித்யா, குஹ்ய வித்யா, மந்த்ர வித்யா, ஆத்ம வித்யா, ப்ரம்ஹ வித்யா என்று பல பிரிவுகள் உள்ளன.
இவை அம்பாளின் ரூபங்கள் என்று விஷ்ணு புராணம் கூறும். இந்த வித்யைகளின் பெயர்களைக் கூறி, "தேவித்வம் விமுக்தி பலவிதாயினி' என்கிறது துதி. அதாவது இவை முக்தியளிக்க வல்லவையாம். தசமஹா வித்யா என்பது தேவியின் பத்து உருவங்களைக் கூறுகிறது. அவை:
1. காளி, 2. தாரா, 3. ஸ்ரீவித்யா,4. புவனேஸ்வரி, 5. திரிபுரபைரவி, 6. சின்ன மஸ்தா, 7. தூமாவதி, 8. பகளாமுகி, 9. ராஜமாதங்கி, 10. கமலாத்மிகா.
இவ்வுருவங்கள் ஒவ்வொன்றுக்கும் மந்திரம், துதிகள், அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் உள்ளன. எவ்வாறு மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் குணங்களும், உருவமும், லீலைகளும் விநோதமோ, அவ்வாறு தசமஹா வித்யா தேவி உருவ லீலைகளும் விநோதம்!
இவ்வன்னையை வணங்கினால் என்னவெல்லாம் கிட்டும்? வினையெல்லாம் அறுப்பாள். பகையை அழிப்பாள். செல்வங்கள் சேர்ப்பாள். ஜெயம் தருவாள். க்ஷேமம் கூட்டுவாள். வெற்றிக்கொடி காட்டுவாள். தொழுபவர் மனதில் நீங்காது இருப்பாள். இறுதியில் நம்மை அவள் மலரடியில் ஏற்பாள்.
அதாவது முக்தி தருவாள்.
ஸ்ரீவித்யா உபாசகர்கள், அமாவாசை, பௌர்ணமி இரவுகளில், நவராத்திரிகளில் தசமஹா வித்யா தேவிகளைப் பூஜித்து இன்புறுவர்.
1. காளி
வங்காளத்தில் அதிகமாக வணங்கப்படும் தேவி. காளிதாஸர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் முதலியவர்கள் துதித்து அருள் பெற்ற தேவி. உக்ரமானவள். கரிய நிறத்தினள். வெட்டப்பட்ட 51 தலைகளை மாலையாய் அணிந்திருப் பவள். (51 அக்ஷரங்களைக் குறிக்கும்). நாக்கு வெளிவந்து ரத்தம் தோய்ந்ததாக இருக்கும். ஒரு கையில் முண்டம், மறு கையில் ரத்தக்கறையுடன் வாள் இருக்கும்.
மகாபிரளய சமயம் உலகங்கள் யாவும் அழிகின்றன. எங்கும் மயான பூமியே. காளி மட்டும் அழியாத நிலை யில் உள்ளாள். பத்ரம் என்றால் மங்களம். நல்லதையே செய்பவள் பத்ரகாளி.
மதுகைடபர் என்ற அரக்கர்களை அழிக்க தேவிக்கு உதவியவள் என்று தேவி பாகவதம் கூறும். காளியின் மந்திரங்கள் ஒன்பது லட்சமாம். அதனுள் கீழுள்ள இந்த மந்திரம் சக்தி வாய்ந்தது.
"ஓம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம்
தக்ஷிணே காளிகே க்ரீம் க்ரீம் ஹும்
ஹ்ரீம் ஸ்வாஹா.'
காளியைத் துதிக்க காளி தந்திரம், உபநிடதம், கவசம், அஷ்டோத்திரம், சகஸ்ரநாமங்கள் உள்ளன.
2. தாரா
சாக்த தந்திரங்கள் பதினோரு இரவுகள் என்று கூறுகின்றன. அவை காள ராத்திரி, வீர ராத்திரி, மோஹ ராத்திரி, மஹா ராத்திரி, க்ரோத ராத்திரி, கோர ராத்திரி, தாரா ராத்திரி, அபலா ராத்திரி, தாருண ராத்திரி, சிவராத்திரி, திவ்ய ராத்திரி. காள ராத்திரியில் தாரா ஆவிர்பாவம். நரக சதுர்த்தியில் தீப உற்சவம். அந்த சதுர்த்தியின் தொடர்புள்ள அமாவாசையே காள ராத்திரி. அது தாராதேவிக்குப் பிரியமான ராத்திரி. வங்காளிகள் வணங்கும் ராத்திரி. செவ்வாய்க்கிழமையில் அமாவாசை வர, அன்று கிரகணமும் சேர்ந்தால் அது தாரா ராத்திரி. அது வருவது அரிது.
தாரா தேவி ராமராகவும், சிவபெருமான் சீதையாகவும் அவதரித்தனர் என்று சாக்த தந்திரம் கூறும். "ரா' என்றால் சக்தி; "ம' என்றால் சிவன். ஆக, சிவசக்தி ரூப பரபிரம்மமே ராமர் என்று சொல்லும்.
மகாபிரளயத்திற்குப்பின் மகாவிஷ்ணுவின் நாபியில் பிரம்மா அவதரித்தார். அவர், "நான் எவ்வாறு வேதத்தை அறியமுடியும்?' என்று கேட்க, "நீ தாரா தேவியை (நீல சரஸ்வதியை) உபாசனை செய். அவள் உனக்கு நான்கு வேதங்களையும் உணர்த்துவாள்' என்றார்.
ஸ்ரீவித்யா தந்திரங்கள், தாரா மந்திரம் சர்வ சித்திகளையும் அளிக்கும். கவிதாசக்தி, சர்வ சாஸ்திர பாண்டித்யம், விவாத வெற்றி என பலவற்றையும் தரும். உக்ரமான கஷ்டங்களிலிருந்தும் காப்பற்றுவதால் அவளை உக்ரதாரா என்பர்.
ஜைனர்கள் தாராவை பத்மாவதி, பிரபாவதி என்ற பெயருடன் வணங்குகின்றனர். பௌத்தர்கள் தாரா என்ற பெயரிலேயே துதிக்கின்றனர். சீனர்கள் மஹோத்ரா என்று வணங்குகின்றனர்.
தாராவைத் துதிப்பதற்கு அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் உள்ளன. தாரா தந்திரம், உபநிஷத் உள்ளன. தாராதேவி குறுவடிவம் கொண்டவள். பிரேதத்தின்மீது கால்கள் இருக்கும். கோர உருவம், முண்டமாலை தரித்தவள். புலிலித்தோல் அணிபவள். கபாலம் ஏந்துபவள். யௌவன வடிவினள்.
3. ஸ்ரீவித்யா
லலிதா திரிபுர சுந்திரியே ஸ்ரீவித்யா. ஷோடசாக்ஷரி, பஞ்சதசாக்ஷரி, லலிதா உபாக்யானம் கூறும் தேவியே இவள். ஆக, அதை மேலும் விவரிக்கவில்லை.
4. புவனேஸ்வரி
ஓங்காரத்தை பிரணவம் என்போம். ஹ்ரீங்காரத்தை சக்திப்பிரணவம் என்பர். ஹ்ரீங் காரமே புவனேஸ் வரியின் மூலமந்திரம். சூரியன், விஷ்ணு, கணபதி, சிவன், சக்தி ஆகிய ஐந்து தெய்வங்களை உள்ளடக்கிய வள் புவனேஸ்வரி. எல்லா புவனங்களுக் கும் ஈஸ்வரி; ஆக, புவனேஸ்வரி! இந்த தேவி வசிக்கும் இடம் மணித்வீபம். அது பிரம்ம லோகம், கயிலாயம், வைகுண்டம், கோலோகம் ஆகியவற்றுக்கும் மேலே உள்ளது. ஆண் உருவம்- புவனேஸ்வரர்; பெண் உருவம்- புவனேஸ்வரி. பிரம்ம விஷ்ணு ருத்ரர்கள் இவளை சேவிக்க வருகின்றனர். பத்மராகம் போன்ற சிவந்த திருமேனி. அணி ஆபரணங்களுடன் விளங்குபவள். வரம், பாசம், அங்குசம் தரிப்பவள். எழிலான உருவம். 14 புவனங் களும் இவள் உடலிலில் உள்ளன.
ராஜ குடும்ப மகாலட்சுமியாகவும், போர்க்களத்தில் விஜயலட்சுமியாகவும், காடுகளில் சபரி என்ற வேடுவத் தலைவி யாகவும், பூதப் பிரேதப் பிசாசுகளால் தொல்லை ஏற்படும் சமயம் மகாபைரவி யாகவும், நதி, கடலைக் கடக்கும்போது தாராதேவியாகவும் விளங்கி, பக்தர்களைக் காக்கிறாள்.
புவனேஸ்வரியை அஷ்டோத்திர, சகஸ்ரநாமத் துதிகளால் வழிபட எல்லாவித சௌபாக்கியங்களை யும் பெறலாம்.
5. திரிபுர பைரவி
பத்தாயிரம் உதய சூரியர்களின் ஒப்பற்ற ஒளியைப் பெற்றவள். முக்கண்ணி. முழுநிலவு போன்ற முகம். ஜபமாலை, புத்தகம், அபயம், வரத கரத்தினள். ரத்தம் வடியும் முண்டமாலை அணிந்தவள்.
தந்திரம், மந்திரம், அஷ்டோத்திரம், சகஸ்ரநாமத்தால் வணங்க கீர்த்தி யுடன், சகல சௌபாக்கியங்களுடன் வாழவைப்பாள்.
6. சின்னமஸ்தா
சூரிய மண்டலத் தில் இருப்பவள். விரித்த கேசம் உடையவள்.
திறந்த வாயுடன், தன் கழுத்திலிருந்து பெருகிவரும் ரத்தம் குடிப்பவள். வெட்டப்பட்ட தலையை இடக்கையில் ஏத்துபவள். தன் தோழிகளான டாகினி, வர்ணினி ஆகியோரால் பார்த்து மகிழப்படுவள். இடக்காலை முன்னா லும், வலக்காலைப் பின்னாலும் வைத்திருப்பவள். முக்கண் உடையவள். இளம்வயதினள். பாம்பைப் பூணூலாக அணிபவள். வலக்கரத்தில் கத்தி ஏந்துபவள்.
இந்த தேவியை மிக எச்சரிக்கையாக வழிபடவேண்டும். வழிபட்டால் புத்திர பாக்கியம், கவித்துவம், சாஸ்திரங்களில் புலமை, சகல பாக்கியங்களையும் அடையலாம்.
தந்திரம், ஹ்ருதயம், அஷ்டோத்திரம், சகஸ்ரநாமங்கள் உள்ளன.
7. தூமாவதி
தாட்சாயணி தன் உடலை தட்சனின் ஹோம குண்டத்தில் இட்டபோது வெளியான ஹோமப்புகையிலிலிருந்து உதித்தவள். (தூமா என்றால் புகை). ஆக, பெயர் தூமாவதி. காக்கைமீது அமர்பவள். கரிய நிறத்தினள். விரிந்த கேசத்தினள். அழகற்றவள். கலகப்பிரியை, ஜேஷ்டா ஆகிய பெயரும் கொண்டவள். அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் உள்ளன.
"ஓம் தூம் தூம் தூமாவதி ஸ்வாஹா' என்ற மந்திரம் உடையவள். இம்மந்திரம் எதிரிகளை அழிக்கப் பயன்படுகிறது. பக்தர்களைக் காப்பவள். எதிரிகளை அழிக்க எருமை, கழுகு, பன்றி ரூபங்களில் செல்பவளாம். இவள் மந்திரத்தை பாழடைந்த கோவிலில், மலையில் ஆடையில்லாமல் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி இரவு ஜபம் செய்யவேண்டும். கத்தியின்மேல் நடப்பதைப் போன்ற வழிபாடுகள்.
8. பகளாமுகி
பஸ்மாசுரனிடமிருந்து பரமேஸ் வரனைக் காத்தவள். பிரளயத்தில், ஆலிலிலையில் குழந்தை வடிவிலிருந்த நாராயணரைக் காத்தவள். சரணடைந்தவர்களின் துக்கம் களைபவள். சத்ருசம்ஹாரிணி தேவி இவள்.
தங்க சிம்மாசனத்தில் அமர்பவள். மஞ்சள் நிற ஆபரணங்கள், உடைகள் அணிபவள். இருகரம் உடையவள். தலையில் பிறைச் சந்திரனை அணிபவள். ஜடா பாரம் உடையவள்.
இவளது உபாசனையை மஞ்சளாடை அணிந்து, மஞ்சள் மாலை தரித்து, மஞ்சள் ஆசனத்தில் அமர்ந்து செய்யவேண்டும். மஞ்சள் பூக்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும். முன்னரும் பின்னரும் காயத்திரி ஜபம் செய்யவேண்டும்.
9. ராஜமாதங்கி
ஸ்யாமளா என்றும் பெயர். லலிதா பரமேஸ்வரிக்கு மந்த்ரிணி.
ராஜராஜேஸ் வரி இவளது ஆலோசனையின் படியே நடப்பாள். மூடனாக இருந்த காளிதாசன், மாதங்கியின் அருளால்தான் மகாகவியானான். மதுரை மீனாட்சியை மாதங்கி என்பர். மதங்க மகரிஷியின் மகள்; எனவே அவள் பெயர் மாதங்கி.
10. கமலாத்மிகா
மகாலட்சுமியின் உருவமே இவள். தங்கமய வண்ணத்தினள். ஆபரணங்கள் அணிந்து மங்களமாய் விளங்குபவள்.
தனம், தானியம், மகப்பேறு, என எல்லாவித சௌபாக்கியங்களையும் தருபவள். வாக்தேவியான சரஸ்வதியாகவும் விளங்குபவள்.
சூரியனைப்போல் பிரகாசிப்பவள். தன்னை வணங்குபவர்களுக்கு சங்கநிதி, பதுமநிதிகளை குபேரன்மூலமாக அளிப்பவள். எட்டுத்தள தாமரையில் அமர்ந்திருக்க, அதன் எட்டு திசைகளிலும் விமலா, உத்சர்ஷிணி, ஞானா, க்ரியா, யோகா, பிரம்மா, ஸத்யா, ஈசானா ஆகிய சக்திகளால் சாமரம் வீசப்படுபவள். பக்தர்கள் விரும்பியதை அளிப்பதால் கமலா என்று பெயர். ஸ்ரீசூக்த ஜபம் செய்யவேண்டும். அஷ்டோத்திர, சகஸ்ரநாமத் துதிகளால் வழிபடலாம்.
நவராத்திரி நாட்களில் அன்னையைத் துதித்து வணங்கி அவளது பேரருளைப் பெறுவோம்.